- பெயர்ச்சொல்
- வினைச்சொல்
- இடைச்சொல்
- உரிச்சொல்
பெயர்ச்சொல்
பெயர்ச்சொல் என்பது ஒன்றன் பெயரை உணர்த்தும் சொல் ஆகும்.
பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் பெயர்ச்சொற்கள் தோன்றும்.
ஆதலால் பெயர்ச்சொல்
பொருட் பெயர்
இடப் பெயர்
காலப் பெயர்
சினைப் பெயர்
பண்புப் பெயர்
தொழிற் பெயர்
என்று ஆறு வகைப்படும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்பவற்றைப் பொருளாதி ஆறு என்றும், பொருள் முதலாறு என்றும் கூறுவர்.
பெயர்ச்சொல் திணை, பால், எண், இடம் ஆகியவற்றை உணர்த்தி வரும்; வேற்றுமை ஏற்கும், காலம் காட்டாது.
பொருட் பெயர்
பொருட்களுக்கு இட்டு வழங்கபெரும் பெயர்ச்சொற்களை பொருட்பெயர் என்றழைப்பர்.
(எ-டு) கை, பை, மரம், காய், கனி.
இடப் பெயர்
தமிழ் இலக்கணத்தில், இடப்பெயர் என்பது பெயர்ச்சொற்களின் ஒரு வகையாகும். இவை இடத்தைச் சுட்டுகின்ற பெயர்கள் ஆகும்.
கோயில், ஊர், இலங்கை, சென்னை, வண்டலூர் என்பன இடப் பெயர்களுக்கு எடுத்துக் காட்டுகள்.
இவற்றுள் கோயில், ஊர் என்பன குறிப்பிட்ட இட வகைகளுக்கான பொதுவான பெயராக அமைந்துள்ளன. அதாவது கோயில் எனும்போது அது பெரும் அளவிலான கோயில்களில் எதையும் குறிக்கலாம். இது போலவே ஊர் என்பதும் பல இலட்சக்கணக்கான ஊர்களில் எதாவது ஒன்றைக் குறிக்கக்கூடும். இதனால் இவ்வகை இடப்பெயர்கள் பொது இடப் பெயர்கள் எனப்படுகின்றன.
இலங்கை, சென்னை போன்றவை குறிப்பாக ஒரு இடத்தை மட்டுமே குறிக்கச் சிறப்பாக அமைந்தவை. இதனால் இத்தகையவை சிறப்பு இடப்பெயர்கள் எனப்படுகின்றன.
அங்கு, இங்கு, எங்கு போன்ற சொற்கள் கு உருபு ஏற்றுவருகின்ற இடப் பெயர்களுக்குப் பதில் சொற்களாக அமைந்து வருகின்றன.
காலப் பெயர்தமிழ் இலக்கணத்தில் காலப் பெயர் என்பது ஒரு வகைப் பெயர்ச்சொல் ஆகும். இது, பொதுக் காலப் பெயர், சிறப்புக் காலப் பெயர் என இரண்டு வகைப்படும்.
ஒரு குறிப்பிட்ட காலத்தைக் குறிக்காமல் காலத்தைப் பொதுவாகக் குறிக்கும் சொற்கள் பொதுக் காலப் பெயர்கள் எனப்படுகின்றன. ஆண்டு, விநாடி, கிழமை, காலம் போன்ற சொற்கள் பொதுக் காலப் பெயருக்கு எடுத்துக் காட்டுகள் ஆகும். குறிப்பிட்ட காலத்தைச் சிறப்பாகக் குறிக்கும் சொற்களான மாசி, பங்குனி, இளவேனில் போன்றவை சிறப்புக் காலப் பெயர்களாகும்.
காலப் பெயர்களுக்கான பதில் சொற்களாக, இப்போது, எப்போது, அப்போது போன்ற சொற்கள் பயன்படுகின்றன.
சினைப் பெயர்
பொருள்களின் உறுப்புகளைக் குறிக்கும் பெயர் சினைப்பெயர் எனப்படும். சினை என்றால் உறுப்பு என்று பொருள்.
உயர்திணைப் பொருள்களின் உறுப்புகளையும் அஃறிணைப் பொருள்களின் உறுப்புகளையும் இது குறிக்கும்.
(எ.கா) கை, கண், கிளை, இலை
பண்புப் பெயர்
தமிழ் இலக்கணத்தில் பண்புப் பெயர் என்பது, ஒரு பொருளின் பண்பைக் குறித்து நிற்கும் பெயர்ச்சொல்லைக் குறிக்கும். எடுத்துக் காட்டாக நீலம் என்பது நிறமாகிய பண்பைக் குறிப்பதால், அது ஒரு பண்புப் பெயர் ஆகும். இவ்வாறே, நீளம், மென்மை, புளிப்பு போன்ற சொற்களும் பண்புப் பெயர்களாகும்.
சில சமயங்களில், பண்புப் பெயரை, நிறம், வடிவம், அளவு, சுவை என்பன போன்ற அடிப்படைகளில் வகைப்படுத்துவதும் உண்டு.
தமிழில், இப்படி, அப்படி, எப்படி போன்ற சொற்கள் பண்புப் பெயர்களுக்கான மாற்றுச் சொற்களாகப் பயன்படுகின்றன.
தொழிற் பெயர்
ஒரு தொழிலை அல்லது வினையை உணர்த்த வரும் பெயர் தொழிற்பெயர் ஆகும்.
எ.கா.
படித்தல் நல்ல பழக்கம் – படி என்னும் தொழிலைக் குறிக்க வந்த பெயர்ச்சொல்.
2 comments:
PLS UPLOAD PDF FIL TO DOWNLOAD
பிடிஎப் தொகுப்பு பதிவிறக்கம் செய்ய கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து கொள்ளவும்
Post a Comment