நடுக்காவேரி முத்துச்சாமி வேங்கடசாமி நாட்டார் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் (ஏப்ரல் 2, 1884 - மார்ச் 28, 1944) வாழ்ந்த தமிழறிஞர். சிறந்த சொற்பொழிவாளராகவும் ஆராய்ச்சியாளராகவும் திகழ்ந்தவர்.
2-4-1884 அன்று ந. மு. வேங்கடசாமி நாட்டார், தஞ்சை மாவட்டம் திருவையாறு வட்டம் நடுக்காவேரி என்ற ஊரில் முத்துச்சாமி நாட்டார் தையலம்மாள் தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்தார். சிவப்பிரகாசம் என இவருக்கு முதலில் பெயரிடப்பட்டது. இளவயதில் இவருக்குத் தொடையின் மேற்புறத்தில் ஒரு கட்டி உண்டாகி வருத்தியது. அது ஆறினால் முடி எடுப்பதாக வேங்கடப் பெருமானை இவர்தம் பெற்றோர் வேண்டிக்கொண்டனர். அவ்வாறு நடந்துவிட, இவர் பெயரை வேங்கடசாமி என மாற்றினர்.
அக்கால வழக்குப்படி உள்ளூர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் நான்காம் வகுப்புவரை படித்தவர். நெடுங்கணக்கு இலக்கம், நெல்லிலக்கம், எண்சுவடி, குழிமாற்று ஆகிய கணக்குச் சார்பான சுவடிகளைப் படித்து முடித்த பின்னர் தம் தந்தையார் மூலம்ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வெற்றிவேற்கை, அந்தாதி, கலம்பகம் வகை நூல்களையும் படித்தார். சாவித்திரி வெண்பா எனும் நூலை இயற்றிய ஐ. சாமிநாத முதலியாரின் தூண்டுதலால் ஆசிரியர் துணையின்றி தானே தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பயின்று மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பிரவேசப் பண்டிதம் (1905), பால பண்டிதம்(1906), பண்டிதம் (1907)ஆகிய தேர்வுகளை எழுதி, முதல் மாணாக்கராகத் தேர்ச்சியுற்று வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்கள் கையால் தங்கத் தோடாப் பெற்றார்.
No comments:
Post a Comment