நடுக்காவேரி முத்துச்சாமி வேங்கடசாமி நாட்டார் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் (ஏப்ரல் 2, 1884 - மார்ச் 28, 1944) வாழ்ந்த தமிழறிஞர். சிறந்த சொற்பொழிவாளராகவும் ஆராய்ச்சியாளராகவும் திகழ்ந்தவர்.
2-4-1884 அன்று ந. மு. வேங்கடசாமி நாட்டார், தஞ்சை மாவட்டம் திருவையாறு வட்டம் நடுக்காவேரி என்ற ஊரில் முத்துச்சாமி நாட்டார் தையலம்மாள் தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்தார். சிவப்பிரகாசம் என இவருக்கு முதலில் பெயரிடப்பட்டது. இளவயதில் இவருக்குத் தொடையின் மேற்புறத்தில் ஒரு கட்டி உண்டாகி வருத்தியது. அது ஆறினால் முடி எடுப்பதாக வேங்கடப் பெருமானை இவர்தம் பெற்றோர் வேண்டிக்கொண்டனர். அவ்வாறு நடந்துவிட, இவர் பெயரை வேங்கடசாமி என மாற்றினர்.